Wednesday, October 14, 2009

Posted by Srinivas at 6:09 AM







செய்தி : சிவகாசியில் சுமார் 576 பட்டாசுத் தொழிற்சாலைகள் இருக்கின்றன. இந்த தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் மட்டும் சுமார் 45,000 வரை இருக்கக்கூடும் என்று NGO நிறுவனங்களின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அரசு தரும் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 10,000.




இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் 90 விழுக்காடு சிவகாசியில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் பெரும்பகுதி ஒரே நாளில் - தீபாவளியன்று, கொளுத்தப்பட்டு விடுகிறது.



குழந்தைத் தொழிலாளர்களில் 90% பெண் குழந்தைகள்தான். அதுவும் 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள்.



இந்தியா - உலகிலேயே அதிக குழந்தை தொழிலாளர்களை கொண்ட நாடு. அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட தொகை 11 மில்லியன். நிஜகணக்கு 75 மில்லியன்.குழந்தை தொழிலாளர்களுக்கு தனி சட்டம் அமல்படுத்தபட்ட ஆண்டு 1986








உங்களின்
மத்தாப்பூக்களுக்காக
பறிக்கப்பட்டுவிட்டன
எங்களின் சிரிப்புகள்.



நீர்சோற்றை பிசையும்போது...
ஊசிபட்டாசுகளை கோர்த்தே
ஊசியாய் போன
விரல்களின் இடுக்குகளில்
சிக்குகிறது வெடிக்கல்.




'கேப்'புகளின் வாசம்
குடிக்கின்ற கேப்பைகளியில்.
உங்களின் குழந்தைகள்




'பென்சில்' பிடிப்பதற்காய்
பேனா பிடிக்கவில்லை
எங்கள் கைகள்.
ராக்கெட்டுகளாய்...
வான்நோக்கி பறந்து
கைக்கு எட்டாமல் சிதறுகின்றன
எங்களின் பள்ளிக்கூட கனவுகள்.


வாசல்தோறும்
சிதறிக்கிடக்கும்
வெடித்த உதிரிவெடிகள்
எங்கள் விரல்களை
நினைவுபடுத்தவில்லையா
உங்களுக்கு?






ஆயிரம்வாலா
சரங்களின்
சபதங்களில்...
யாருக்கும் கேட்காமல்போனது
எங்களின் அழுகுரல்.




மழையில்
நமுத்துப்போன
புஸ்வாணங்கள்...
எங்களுக்காக
போடப்பட்ட
சட்ட, திட்டங்கள்

ஒரு நொடியில்
எரிந்து,புகைக்கும் சாட்டைகள்....
அறுக்க இயலாத
சங்கிலிகளாய் கட்டுகின்றன
எங்கள் ஒட்டுமொத்த வாழ்வையும்.



ஒரே ஒரு நாள்
கொண்டாடும் உங்களின்
தீபாவளி வெளிச்சதிற்க்காய்...
வருடந்தோறும்
உருகும் மெழுகுவர்த்திகள் நாங்கள்....

கவிதை : இன்பா













0 comments on " "

Post a Comment

x